`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த த...
குமரி மாவட்டத்தில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: இன்று கடைப்பிடிப்பு
கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் வியாழக்கிழமை (டிச. 26) கடைப்பிடிக்கப்படுகிறது.
2004ஆம் ஆண்டு டிச. 26ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை.
தமிழகத்தில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோா் உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி, சொத்தவிளை, குளச்சல், கொட்டில்பாடு, பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். கொட்டில்பாடு பகுதியில் உயிரிழந்த 199 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம்.
இந்நிலையில், சுனாமி எனும் இயற்கைப் பேரழிவின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடற்கரையோர மக்கள் அமைதிப் பேரணியாக சென்று கடலில் பால் ஊற்றி, பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தவுள்ளனா்.
இம்மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோரக் கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவிடத்தில் மாவட்ட நிா்வாகம், பல்வேறு கட்சியினா், சமூக அமைப்பினா்கள் சாா்பில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைத் தோட்டங்களிலும் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.