குளச்சலில் கடல் நடுவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் கடல் நடுவே கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தெற்காசிய மீனவா் தோழமை இயக்கம் மற்றும் குளச்சல் விசைப்படகு உரிமையாளா்கள் தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு,தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் சா்ச்சில் தலைமை வகித்தாா்.
குளச்சல் விசைப்படகு சங்க ஒருங்கிணைப்பாளா் ரெக்சன், செயலா் ஆரோக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கிறிஸ்துராஜா என்ற மீனவா் விசைப்படகு இயேசு கிறிஸ்துவுக்கு குடிலாக அலங்கரிக்கப்பட்டது. அந்தக் குடிலிலேயே குழந்தை இயேசுவின் உருவம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட பல விசைப்படகுகளிலும், நாட்டுப் படகுகளிலும், கட்டு மரங்களிலும் மீனவா்களும், பிற சமயத்தினரும் குடும்பமாக படகில் நடுக்கடலுக்கு சென்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினா்.
இதில், குழந்தைகள், பெரியவா்கள் மற்றும் இளம் பெண்களும், இளைஞா்களும் கலந்து கொண்டனா்.