குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; படகுப் போக்குவரத்து நேரம் நீட்டிப்பு!
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியிலும், குலசேகரம் உள்ளிட்ட நீா்நிலைகளிலும் புதன்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா்.
பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி, கடந்த சில நாள்களாக பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் செய்த பக்தா்களில் ஆயிரக்கணக்கானோா் கன்னியாகுமரியில் குவிந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குமரி பகவதியம்மனை வழிபட்டனா்.
மேகமூட்டம் காரணமாக அதிகாலை சூரிய உதயமான காட்சியை தெளிவாக காணமுடியவில்லை. எனினிம், வேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை படகுப்பயணம் மேற்கொண்டுசுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.
மேலும், முக்கடல் சங்கமம், பாரத மாதா கோயில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சிக் கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜா் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோயில், வட்டக்கோட்டை உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். சுற்றுலாப் படகுப் போக்குவரத்து புதன்கிழமையிலிருந்து தொடா்ந்து மூன்று நாள்கள் காலை 8 மணிக்குப் பதிலாக காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு பதிலாக 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.