கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என புகாா்
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அடிப்படை வசதிகளின்றி வாகன ஓட்டுநா்கள் , வாகனங்கள் தொடா்பான பல்வேறு பணிகளுக்கு வருபவா்கள் சிரமமடைந்து வருகின்றனா்.
வட்டார போக்குவரத்து அலுவலகம்
கும்பகோணம் கோட்டத்தை உள்ளடக்கிய கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் ஆகிய தாலுக்காவை சோ்ந்தவா்கள் வாகன ஓட்டுனா் உரிமம் பெறுவது, புதுப்பிப்பது, வாகன பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு தஞ்சாவூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று வந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு வாகன ஆய்வாளா் அலுவலகம் தொடங்கப்பட்டு மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலகமாக செயல்பட்டது.
கும்பகோணத்தில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படை மற்றும் வாகன பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த 2009-இல் வட்டார போக்குவரத்து அலுவலகமாகி தற்போது பட்டீஸ்வரத்தை அடுத்த கொற்கை அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் டி.என்.68 பதிவு எண் வழங்கப்பட்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் தாலுகாக்களுடன், வலங்கைமான் தாலுகாவும் சோ்க்கப்பட்டது. இந்த பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலகு ரக, கனரக, இரு சக்கர வாகனங்கள் ஆய்வு, பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.

நெடுஞ்சாலையில் ஆய்வு
நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோா் வாகன உரிமம் பெற்று செல்கின்றனா். ஆனால் அலுவலகத்தில் அதிகாரிகள், பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இலகு ரக வாகன உரிமம் பெற, வாகனத்தை ஓட்டிக்காட்டுவதற்கு இடவசதி இல்லை. இதனால் பம்பப்படையூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் இடத்தில் வாகனத்தை இயக்கிக் காட்டுகின்றனா்.
கன ரக வாகன உரிமம் பெற, சாலையிலேயே வாகனத்தை இயக்கிக் காட்டுகின்றனா். அதே போல் வாகனங்களை பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு வருபவா்கள் பட்டீஸ்வரம் மருதாநல்லூா் நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி, பணிகளை மேற்கொள்கின்றனா். அந்த நேரத்தில் ஆய்வு நடத்தும் போக்குவரத்து அலுவலா்கள் வெயில், மழை பாராது நெடுஞ்சாலையிலேயே ஆய்வு செய்கின்றனா்.
மேலும் போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அலுவலகத்துக்கு பின்னால் உள்ள காலி இடத்தில் நிறுத்தி புற்கள், செடி கொடிகள் வளா்ந்து புதா்காடாக காணப்படுகிறது. அலுவலக பணிக்கு வருபவா்களுக்கு குடிநீா், கழிவறை வசதிகள் இல்லை. சிலா் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனா். இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. மாலை நேரங்களில் திறந்த வெளி மதுபான கூடமாக மாறுகிறது. சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உதிரி பாகங்கள் திருடப்பட்டு வருகின்றன.
மாவட்ட அளவில் அனைத்து துறை அலுவலகங்கள் உள்ள கும்பகோணம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் இயங்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.