குறைகள் தீர...
சிவந்த நடுத்தர உயரம், தலையில் குல்லா, அரையாடை, அருள் தரும் முகம், கருணை விழிகள், மந்திரங்களை உச்சரிக்கும் உதடுகள், சைகை மொழி பார்வை.. என்ற சிறப்புகளைக் கொண்ட அவர் சின்னபாபுசமுத்திரத்தில் உள்ள மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அடிக்கடி புதுச்சேரியிலுள்ள திருக்கனூர் செல்வார். சூட்சும உடலில் உலாவுவதோடு பல்வேறு சித்துகள் பெற்றவர். இமயமலையில் தவக்காலத்தில் உளிபடாத "நிஷ்டதார்யம்' என்னும் கல்லில் அழகிய லிங்கம் உருவாக்கி, மக்கள் வழிபட ஆலமரத்தடியில் அருணாசலேஸ்வரர் கோயிலாக நிறுவினார்.
தும்புரு வீணையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு கண்களால் ஆசி அருளுவார். குறைகளைச் சொல்ல காது குனிந்து பேசும் பக்தர்கள் சிலருக்கு சிறிய மண்கலசத்திலிருந்து கொட்டாங்குச்சியால் நீரை தருவார். அருந்தியதும் ஆசிர்வதிப்பார். சிலருக்கு பச்சிலைகளை அளிப்பார். மக்களின் நோய்களை நீக்கும் ஒரு மகாபுருஷனாக விளங்கியவர்தான் "மகான் சிவஸ்ரீ படே சாகிப்' .
ஒருநாள் கருநாகம் அவரைத் தீண்ட, உடல் நீல நிறம் அடைந்தது. பதற்றப்படாமல் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று விநாயகரை வணங்கி நிஷ்டையில் அமர்ந்தார். தீண்டிய கருநாகம் மீண்டும் வந்து, அவரை மும்முறை வலம் வந்து தீண்டிய இடத்தில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சியது. பின்னர், பாம்பு விநாயகரை வலம் வந்து, மகானின் தலை மேல் படம் எடுத்து இறங்கி தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியபடியே தனது உயிரை விட்டது. நாகத்துக்கு மகான் ஆசி தந்து மோட்சம் அளித்து இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
ஒருமுறை கட்டிலோடு ஒரு சிறுவனை நான்கு பேர் தூக்கி வந்தபோது, மகான் சீற்றத்துடன் ஒரு கம்பை எடுத்து வந்தவர்களை விரட்டினர். வந்தவர்களோடு கட்டிலிலிருந்த சிறுவனும் பயந்து எழுந்து ஓடினான். பின்னர், மகான் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். கட்டில் தூக்கி வந்தவர்கள் திரும்பிப்பார்த்து சிறுவன் ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தனர். பிறந்த முதல் நடக்காத சிறுவனை அதிர்ச்சி வைத்தியம் மூலம் குணமாக்கினார் படே சாகிபு. இதேபோல் பல அற்புதங்கள் நடைபெற்றுள்ளன.
1868 பிப்ரவரி 12}இல் ( செவ்வாய்க்கிழமை) மாசி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரத்தன்று மரத்தடியிலிருந்த குழந்தைகளை அழைத்து, ஒரு பள்ளத்தில் சென்று அமர்ந்தார். தன் மீது மணலைப் போட்டு மூடச் சொன்னார். பின்னர், மகானின் கை மட்டும் நிறைய மிட்டாய்களுடன் வெளியே வர அதை சிறுவர்கள் எடுத்துக்கொண்டு ஊருக்குள் சென்று நடந்ததைக் கூறினர். ஊரார் பார்த்தபோது மகான் ஜீவசமாதி ஆகிவிட்டதை உணர்ந்தனர்.
சிலநாள் கழித்து "பம்பாய் சுவாமி' என்பவர் அங்கு வந்து, ஜீவசமாதி மீது கோயில் அமைத்து வழிபட்டார். கோயிலில் எண்கோண வடிவ கருவறையும், மகானின் திருமுக உருவும், அணையா விளக்கும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
மகான் பிறப்பு குறித்து தகவல் இல்லை.
கொடிய தொற்று, தீராத நோய்களால் அவதியுறுவோர் படே சாகிப் ஜீவசமாதியை செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமை, ஆயில்ய நட்சத்திரத்தன்று தரிசனம் செய்து, இயன்ற அளவு அன்னதானம், நீர் மோர், பழ வகைகளை தானம் செய்து பலன்களைப் பெறுகின்றனர். பக்தர்களுக்கு விபூதி, துளசி தீர்த்தம் அளித்தும், மயில் இறகால் ஓதி, சந்தனம் தந்து வழிபாடும் நடைபெறுகிறது. சமாதியையும் மகிழ மரத்தையும் சுற்றி தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
"கையில் பச்சை கயிற்றையும் கட்டிக் கொண்டாலும், பச்சை துணியில் கட்டித் தரும் தேங்காயை வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் வைத்தாலும், கண் திருஷ்டி கழிந்து செல்வம், தொழில், வியாபாரம் பெருகும்' என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
விழுப்புரம் } புதுச்சேரி பிரதான சாலையில் வில்லியனூர் வழியாகச் செல்லும் சாலையில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் இறங்கி, சுமார் 2 கி. மீ. தொலைவில் சின்னபாபுசமுத்திரத்தில் படே சாஹிப் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஜீவசமாதியான தினத்தில்
குரு பூஜை நடைபெறுகிறது.
இந்தாண்டு குருபூஜை மார்ச் 11}இல் நடைபெறுகிறது.
}இரா.இரகுநாதன்