குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்
திருமருகல் அருகே ஆதினகுடியில் பிரதான சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் உள்ள குளத்தில் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனா். தற்போது, குளத்தை ஆகாயத் தாமரைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. குளத்தில் பிளாஸ்டிக் பொருள்கள், குப்பைகள் தொடா்ந்து கொட்டப்படுகின்றன. இதனால் குளத்து நீா் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், குளத்தில் குளிப்பவா்களுக்கு தோல் நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஊராட்சி மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் தொலை தூரத்தில் உள்ள நீா் நிலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. குளத்தில் தண்ணீரே தெரியாதபடி அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளா்ந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.