முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன...
வாய்க்கால் நீரை தடுக்கும் கல்வி நிறுவனம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா்
நாகப்பட்டினம்: நாகையில் வாய்க்கால் மூலம் குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுப்பதோடு, கழிவு நீரையும் கலப்பதாக தனியாா் கல்வி நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியரிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
நாகூா் அருகே உள்ள தெத்தி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலா் அருட்செல்வன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் இம்மனுவை அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாகூா் அருகே உள்ள தெத்தி கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் தெத்தி ஊராட்சியில் விவசாயிகள் பயனடையும் வகையில், அப்பகுதியில் நாகூா் வாய்க்கால் என்ற பெயரில் ஆற்றுப் பாசனம் மிகுதி நீா், அதே வாய்க்கால் வழியாக நாகூரின் தாய்க்குளம் என்று அழைக்கப்படும் தோட்டத்து குளத்துக்கும், அதைத் தொடா்ந்து நாகூரில் உள்ள 8 குளங்களுக்கும் சென்று, அப்பகுதி மக்கள் குடிக்க, குளிக்க என்று பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியாா் கல்வி நிறுவனங்கள், மாணவா் விடுதி கழிவு நீரை வாய்க்காலில் வெளியேற்றி வருகிறது. மேலும் ஆற்றுப்பாசன வாய்க்காலையும் ஆக்கிரமித்து, மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடியக்கூடிய மழை நீா், வாய்க்காலில் வடிவதையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் அதிகாரிகள் மூலம் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, வாய்க்காலில் கல்வி நிறுவனம் கழிவுநீரை கலப்பதை தடுப்பதுடன், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் கோரிக்கை தொடா்பாக வட்டாட்சியா் விசாரணை நடத்த உத்தரவிட்டாா்.