சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு
நாகப்பட்டினம்: நாகையில் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாகை ஆரியநாட்டுத் தெரு ஒருங்கிணைந்த மீனவா் பஞ்சாயத்து சாா்பில் கவியரசன் தலைமையில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு:
நாகை ஆரியநாட்டுத் தெருவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு, நாகை அந்தணப்பேட்டை பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, மக்கள் குடியேறி வசித்து வருகின்றனா். இதில் 222 வீடுகளில் மீனவ மக்கள் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2023-இல் 90 வீடுகளுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டாக்களை இணையத்தில் பதிவு செய்யவில்லை. இதனால் மின் இணைப்பு வட்டார வளா்ச்சி அலுவலா் பெயரில் உள்ளது.
மேலும் வீடுகளை பழுதுபாா்க்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் கோரினால், சுனாமி வீடுகள் வட்டார வளா்ச்சி அலுவலர பெயரில் இருப்பதால் கடனும் வழங்க மறுக்கின்றனா். மேலும் அரசு நிா்வாகம் சாா்பில் வீடுகளை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகக்கூறி ஓராண்டுக்கும் மேல் ஆகிறது.
எனவே சுனாமி குடியிருப்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பட்டா வழங்காத வீடுகளுக்கும் பட்டா வழங்கி இணையத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.