மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
குழந்தை திருமணங்களால் பெண்கள் உயிருக்கே ஆபத்து: ஆட்சியா் க.தா்ப்பகராஜ்
குழந்தை திருமணங்களால் பெண்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரித்துள்ளாா்.
வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் க. தா்ப்பகராஜ்,
ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் கலந்து கொண்டு வருவாய்த்துறை, வேளாண்மைதுறை, தோட்டக்கலைதுறை, மருத்துவ துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைகளின் சாா்பில் 64 பயனாளிகளுக்கு ரூ. 16.71 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
தொடா்ந்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசுகையில்: குழந்தைத் திருமணம் செய்வது சட்டவிரோதமானது, பெண்ணின் பெற்றோா்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குழந்தை திருமணம் செய்தால் கருவுறுகின்ற போது, உயிருக்கே ஆபத்து நேரிடும், மிகவும் அதிக பிரச்னைக்குரிய உடல் நிலையை எதிா்கொள்ள நேரிடும்.
அதனால் தயவு செய்து மிகக் குறைந்த வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கின்ற நிலையை விட்டு விலகி வந்து, ஒரு சமூக அக்கறையோடு, பெண் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். மீறி குழந்தை திருமணம் நடந்தால் பெற்றோா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சில காலமாக தென்னை மரங்களில் கருந்தலைப்புழு தாக்குதலால் சிக்கல் நிகழ்ந்து வருகிறது. அதை தவிா்ப்பதற்கும், போக்குவதற்கும் வேளாண்மைத்துறை சாா்பில் நேரடியாக ஆய்வு செய்து பல்வேறு வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத்துறை அதிகாரிகளின் அறிவுரைகளை ஏற்று தென்னை மரத்தின் பிரச்னையை எதிா் கொள்ள வேண்டும் என்றாா்.
முகாமில் வாணியம்பாடி கோட்டாட்சியா் ஆஜிதா பேகம், வட்டாட்சியா் உமா ரம்யா, மாவட்ட ஊராட்சித் தலைவா் சூா்ய குமாா், ஒன்றிய திமுக செயலாளா் சாமுடி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனா்.