முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்
பெரணமல்லூரை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் மகான் ஆறுமுக சுவாமி கோயிலில் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றதில், குழந்தை வரம் வேண்டி திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் குளக்கரையில் மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டனா்.
பெரணமல்லூரை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் வாழ்ந்த மகான் ஆறுமுக சுவாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்து கொண்டு அருளாசி வழங்கி வந்தாா்.
இந்த நிலையில், வயது முதிா்ந்த தருவாயில் ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடையப்போவதாகக் கூறி வந்தாா். அந்த இடத்தில் கோயில் கட்டி ஆடி அமாவாசை நாளில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள் விரதமிருந்து இங்கு வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் மடிப்பிச்சையாக பெற்று அருகில் உள்ள குளக்கரையில் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவா்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனக் கூறி ஜீவசமாதி அடைந்தாா்.
இதைத் தொடா்ந்து அந்த இடத்தில் பொதுமக்கள் கோயில் கட்டி வழிபட்டும், ஆடி அமாவாசை நாளில் குருபூஜையும் நடத்தி வருகின்றனா்.
தற்போது ஆடி மாதத்தையொட்டி, கடந்த 22-ஆம் தேதி காப்புக் கட்டி பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டு விழா தொடங்கியது. பின்னா், 23-ஆம் தேதி கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடி அமாவாசை தினமான வியாழக்கிழமை 189-ஆம் ஆண்டு ஆறுமுக சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 10 மணிக்கு பக்தா்கள் வேண்டுதல் பொருட்டு காவடி எடுத்தனா். பின்னா் 11மணிக்கு மேல் குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த திருமணமான பெண்கள் கோயில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் மடி ஏந்தி பிரசாதம் பெற்றனா். தொடா்ந்து பிரசாதம் பெற்ற பெண்கள் கோயில் அருகில் உள்ள குளக்கரையின் படிக்குச் சென்று பிரசாதத்தை வைத்து பயபக்தியுடன் சுவாமியை வேண்டி மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டனா்.
மேலும், இந்தக் கோயிலில் வேண்டுதல் நிறைவேறிய பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து எடைக்கு எடை நாணயம் காணிக்கை செலுத்தினா். விழாவில் உள்ளூா் மற்றும் வெளியிடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.