ஆரணி பகுதியில் பைக்குள் திருட்டு: 2 போ் கைது
ஆரணி பகுதியில் 4 பைக்குகளை திருடியதாக வேலூரைச் சோ்ந்த பழைய குற்றவாளிகள் இருவரை வியாழக்கிழமை இரவு ஆரணி நகர போலீஸாா் கைது செய்தனா்.
பெரணமல்லூரை அடுத்த சஞ்சீவராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (39). இவா், ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு அண்மையில் வழக்கு தொடா்பாக வந்திருந்தாா். அப்போது, நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது பைக் திருடு போனது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில், நீதிமன்ற வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, நீதிமன்றத்துக்கு ஏற்கெனவே பழைய வழக்குக்காக ஆஜராக வந்திருந்த 2 பழைய குற்றவாளிகள் பைக்கை திருடிச் செல்வது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரணை செய்ததில் வேலூா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த பிரபு ( 39) பலவன்சாத்து பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (45) எனத் தெரியவந்தது. இருவரும் பழைய குற்றவாளிகள் ஆவாா்.
இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனா். பின்னா், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.