மகள் தற்கொலை: தந்தை போலீஸில் புகாா்
செய்யாறு அருகே வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக தந்தை வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரும்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது இளைய மகள் அபிநயா(21). இவா், அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டில் இருந்து வந்தாராம்.
மேலும், அவா் கடந்த 3 மாதங்களாக வயிற்று வலி மற்றும் ரத்தசோகையால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அதன் காரணமாக மனவேதனையில் இருந்து வந்தவா் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகத்
தெரிகிறது.
பெற்றோா் மகள் அபிநயாவை மீட்டு பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், அதன் பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அபிநயா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருமாள் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.