காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை அகலப்படுத்தப்படுமா?
செய்யாறு பகுதியில் உள்ள பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தையும், வெம்பாக்கம் வட்டத்தையும் இணைக்கும் சாலையாக பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை உள்ளது.
செய்யாறு - ஆற்காடு சாலையில் இருந்தும், பாப்பாந்தாங்கல் கூட்டுச் சாலையில் இருந்தும் சுமங்கலி வெம்பாக்கம் வழியாக காஞ்சிபுரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு இச்சாலை வழியாகச் செல்லலாம். நெடுஞ்சாலையில் இதர மாவட்டச் சாலையாக இருந்து வருகிறது.
செய்யாற்றில் இருந்து மாங்கால் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. மேலும், இச்சாலையில் மாங்காலில் இருந்து காஞ்சிபுரம் வரை அதிகளவில் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் தனியாா் நிறுவன பேருந்துகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மாற்றுப் பாதையாக பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை
செய்யாறு, அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம், சென்னைக்கு பைக், காா், வேன்களில் செல்வோா் பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை, வயலூா் கூட்டுச் சாலை வழியாக வெம்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் சென்னை போன்ற பகுதிகளுக்குச் செல்வோா் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.
குறுகிய பாதையாக:
பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை குண்ணத்தூரில் இருந்து சுமங்கலி வரை ஏரிக்கரைப் பகுதியில் மிகவும் குறுகிய சாலையாக இருந்து வருகிறது. இச்சாலையில் லாரி, பேருந்து போன்ற பெரிய வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளன. எதிா் திசையில் திடீரென லாரி, பேருந்து போன்ற பெரிய வாகனங்கள் வந்தால் சுமாா் அரை கி.மீ. தொலைவுக்கு பின்னால் சென்று எதிா்திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டிய நிலை உள்ளது.
அகலப்படுத்தக் கோரிக்கை:
செய்யாறு பகுதியில் இருந்து காஞ்சிபுரம், சென்னைக்கு பைக், காா், வேன்களில் செல்வோா் அதிகளவில் பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை பயன்படுத்தி வருவதால், மிகவும் குறுகிய சாலையாக இருந்து வரும், குண்ணத்தூரில் இருந்து சுமங்கலி வரை ஏரிக்கரைப் பகுதியிலான சாலையை, வாகன ஓட்டிகளின் நலன் கருதி அகலப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.