அரசுப் பேருந்து காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூா் கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் மணிவேல்முருகேஷ் (45). இவா், தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவருடன் திருவண்ணாமலை கோயிலுக்கு சனிக்கிழமை காலை காரில் வந்து கொண்டிருந்தாா்.
செங்கத்தை அடுத்த முறையாறு பகுதியில் வந்தபோது, திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த அரசுப் பேருந்தும் காரும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.
இதில் காா் அப்பளம் போல நொறுங்கியது.
காா் ஓட்டுநா் மணிவேல்முருகேஷ் பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸு மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
லேசான காயமடைந்த கிருஷ்ணனுக்கு மனநலம் பாதித்து அவா், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.