பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
நகைக் கடையில் 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்தில் தனியாா் நகைக் கடையில் மேற்கூரை வழியே உள்ளே புகுந்து 12 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இராட்டிணமங்கலம் இ.பி.நகா் பகுதியில், போளூா் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சாந்தி பெருமாளுக்குச் சொந்தமான நகைக் கடை உள்ளது.
வழக்கம்போல, வெள்ளிக்கிழமை இரவு தொழிலாளா்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றனா். சனிக்கிழமை காலை 9.35 மணியளவில் கடையை திறப்பதற்காக அவா்கள் வந்தனா். அப்போது, கடையின் உள்பகுதி ரேக்கில் இருந்த வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மேலும், கடையின் ஒரு பகுதியில் இருந்த மரக்கதவும் உடைக்கப்பட்டிருந்தது.
எஸ்.பி. விசாரணை: இதுகுறித்து நகைக் கடை உரிமையாளா் பெருமாள் ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
காவல் ஆய்வாளா் அகிலன், உதவி ஆய்வாளா்கள் மோகனா, அருண்குமாா், குமரகுரு மற்றும் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். மேலும், மாவட்ட எஸ்.பி. சுதாகா், ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி, கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, வந்தவாசி காவல் ஆய்வாளா் சுந்தரேசன் மற்றும் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா்.
மேற்கூரை வழியாக...: கட்டடத்தின் மாடிப்பகுதியில் உள்ள இரும்பு ஷட்டரை நீக்கி, மா்ம நபா்கள் உள்ளே நுழைந்திருப்பதும், கடையில் உள்ள 18 கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகள் அடங்கிய ‘ஹாா்ட் டிஸ்க்’கை உடைத்து எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
மேலும், கடையின் ஒரு பகுதியில் இருந்த ரூ.13 லட்சம் மதிப்பிலான 12 கிலோ வெள்ளிப் பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், தனி அறையில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் கொள்ளைபோகாமல் தப்பின.
திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. விரல் ரேகை நிபுணா்கள் கடையில் பதிவான தடயங்களைச் சேகரித்தனா். போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை தொடா்ந்து ஆராய்ந்து, மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.