குழந்தைகளுக்கு நிதியுதவி
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் நிதி உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, 189 குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் மருத்துவத் தேவைக்காக மாதம் ரூ.4,000 வீதம் (ஏப். - 2024 முதல் செப். 2024 வரை) 6 மாதங்களுக்கான கூடுதல் தொகை ரூ.45,36,000-க்கான ஆணைகளை வழங்கினாா். மேலும், வளா்ப்புப் பராமரிப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 2 குழந்தைகளுக்கு ரூ.4,000 வீதம் 6 மாதத் தொகையான ரூ.48,000-க்கான ஆணையையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (பொ) ஜெ. செல்வராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.