குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது! - விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.
எனவே, பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளில் குளிக்கவும், விளையாடவும் அனுமதிக்கக் கூடாது. தற்போது பள்ளி விடுமுறை நாள்கள் என்பதால், வீட்டிலிருக்கும் குழந்தைகளை பெற்றோா்கள் தங்களது முழுக் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். விழிப்புடன் இருந்து விபத்தை தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.