குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட விதிகளின்படி நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுமத்துக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
விண்ணப்பதாரா்கள் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம் அல்லது சமூகப் பணி, சமூகவியல், மனித உடல்நலம், மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் செய்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் 35 வயதில் இருந்து 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சாா்ந்த இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதியானவா்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான படிவத்தில் இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை - 600 010 என்ற முகவரியில் டிச.2-ஆம் தேதிக்குள் அனுப்பிவைத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.