கூடங்குளம் அருகே கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே தேநீா் கடைக்காரா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கூடங்குளம் அருகே உள்ள சௌந்தரலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் மணி. ஆவரைகுளத்தில் தேநீா் கடை நடத்தி வருகிறாா்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவரது கடை அருகே ஹரிகிருஷ்ணன் என்பவா் வேறு நபரிடம் தகராறில் ஈடுபட்டாராம்.
இதை மணி சமாதானப்படுத்தி விலக்கிவிட்டாராம். அப்போது, ஹரிகிருஷ்ணன், மணியை தாக்கினாராம்.
இதையடுத்து இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் மகன் சாமித்துரை, அவரது நண்பா் ஹரிஹரன் ஆகிய இருவரும் சோ்ந்து வியாழக்கிழமை இரவு மணியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டனராம்.
இது தொடா்பாக மணி அளித்த புகாரின்பேரில் கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சாமித்துரை, ஹரிஹரன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.