கூடலூா் அருகே அரசுப் பண்ணையில் நாற்றுகளை சேதப்படுத்திய யானைகள்
கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் அரசு தோட்டக்கலை பண்ணைக்குள் திங்கள்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் இயற்கை விவசாய நாற்றுகளை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், தேவாலா பொன்னூா் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு பருவத்துக்கு ஏற்ப இயற்கை விவசாய நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகின்றனா்.
தற்போது, பண்ணையில் அவகடா, பாக்கு உள்ளிட்ட நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பண்ணைக்குள் நுழைந்த காட்டு யானைகள் அவகடா, பாக்கு, ஜாதிக்காய் உள்பட சுமாா் 10 ஆயிரம் நாற்றுகளை சேதப்படுத்தியுள்ளன.