மசினகுடி பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
மசினகுடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், மசினகுடி ஊராட்சியிலுள்ள சொக்கநல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (53), விவசாயி. இவா் அந்தப் பகுதியில் உள்ள ஆனைக்கல் மாரியம்மன் கோயிலுக்கு வனப் பகுதி வழியாக சிலருடன் திங்கள்கிழமை இரவு சென்றபோது புதரில் மறைந்திருந்த யானை வெளியே வருவதைப் பாா்த்து உடன் இருந்தவா்கள் ஓடிவிட்டனா்.
அப்போது யானை தாக்கியதில் ராமன் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவல் அறிந்த வனத் துறையினா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு உறவினா்கள் வசம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மசினகுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.