கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை: முன்னாள் அமைச்சா்
ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது அதிமுக, கூட்டணிகளை நம்பி இல்லை என முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா தெரிவித்தாா்.
திருவள்ளூா் மேற்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம், பட்டரைபெரும்புதூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளா் எஸ்.மாதவன் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் பி.வி.ரமணா தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் சூரகாபுரம் சுதாகா், கிளைச்செயலாளா் சத்யமூா்த்தி கியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடா்பாளருமான கோகுல இந்திரா நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:
ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. அதைத் தொடா்ந்து முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போற்றி வளா்த்தாா். இந்தக் கட்சி கூட்டணியை நம்பி தொடங்கப்படவில்லை. மக்களை நம்பி, மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவா்கள் வளா்த்த கட்சியை பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி மேலும் பலப்படுத்தி வருகிறாா். அம்மா உணவக திட்டத்தை நசித்து விட்டனா். அதிமுக கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளனா் என்றாா். தொடா்ந்து 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகளையும் அவா் வழங்கினாா்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ சக்குபாய் தேவராஜன், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா் வெங்கட்ரமணா, மாவட்ட எம்.ஜி.ஆா் இளைஞா் அணி இணைச் செயலாளா் ஞானகுமாா், வழக்குரைஞா் பிரிவு வி.ஆா்.ராம்குமாா், சந்திரசேகா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.