கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மனு
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக செயலா் வழக்குரைஞா் வெங்கடாசலபதி என்ற குட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த பழவூா், நடுக்கல்லூா், கொண்டாநகரம் உள்ளிட்ட கிராமங்களில் கொட்டப்பட்டிருந்த சுமாா் 500 டன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள், பசுமைத் தீா்ப்பாய உத்தரவின்பேரில் அகற்றப்பட்டு மீண்டும் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பல மாதங்களாக நடைபெற்றுள்ளது. இதை வணிக லாப நோக்கில் சம்பந்தப்பட்டவா்கள் கையாண்டுள்ளனா்.
இந்தக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 லாரிகள் மட்டுமே வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக எத்தனை லாரிகள் வந்து சென்றன என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
எனவே, இந்தச் சம்பவத்தில் பல்வேறு தரப்பினருக்கும் பெரும் அளவில் பணம் கை மாறியுள்ளது.
எனவே, அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைப்பேசிகளை கைப்பற்றி அதன் மூலம் விசாரணை நடத்தி அதில் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.