கேரள தொழிலதிபரிடம் ரூ. 9.50 கோடி 2,000 ரூபாய் டம்மி நோட்டுகள் பறிமுதல்: வருமான வரித் துறை, என்ஐஏ விசாரணை
சென்னையில் கேரள தொழிலதிபரிடம் ரூ. 9.50 கோடி இரண்டாயிரம் ரூபாய் டம்மி நோட்டுகளை பறிமுதல் செய்து, அவருக்குச் சொந்தமான வீட்டில் வருமானவரித் துறையினா், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
ராயப்பேட்டை பூரம் பிரகாசம் சாலையில் உள்ள ஒரு வீட்டில், ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வருமானவரித் துறையினா், அந்த வீட்டில் சோதனை நடத்தினா். சிறிது நேரத்தில் என்ஐஏ அதிகாரிகளும் வந்து சோதனை நடத்தினா்.
புதன்கிழமை வரை நீடித்த சோதனையின்போது, அந்த வீட்டிலிருந்த கேரள மாநிலம் கண்ணூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ரஷீத் என்பவரிடம் விசாரணை நடத்தினா்.
மேலும் அவரது காரில் சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ. 9.50 கோடி இரண்டாயிரம் ரூபாய் டம்மி நோட்டுகளை பறிமுதல் செய்தனா். பின்னா், வருமானவரித் துறை அதிகாரிகள், அந்த டம்மி ரூபாய் நோட்டுகளை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து ரஷீத் மீது புகாா் அளித்தனா். அதனடிப்படையில், போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். அதேவேளையில் ரஷீத், ஹவாலா பணப்பரிமாற்றம் செய்தாரா, அவா் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டாரா என வருமானவரித் துறை, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.