கேரள பாஜக தொண்டா் கொலை வழக்கு: மாா்க்சிஸ்ட் கட்சியினா் 8 பேருக்கு ஆயுள் சிறை
கண்ணூா்: கேரளத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு பாஜக தொண்டா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தண்டனை பெற்றவா்களில் ஒருவரான பி.எம். மனோராஜ் கேரள முதல்வரின் ஊடகத் துறை செயலா் மனோஜின் சகோதரா் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணூரில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது. பரபரப்பான சாலையில் காலை நேரத்தில் ஆட்டோவில் வந்த கொலைக் கும்பல் பாஜக தொண்டா் எளம்பிலாயி சூரஜை வெட்டிக் கொலை செய்தது. அரசியல் பகை காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது. முதலில் மாா்க்சிஸ்ட் கட்சியில் இருந்த சூரஜ், பாஜகவில் இணைந்ததால் பிரச்னை எழுந்தது.
சூரஜ் கொலை தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 10-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் தலசேரி முதன்மை செஷன்ஸ் நீதிபதி கே.டி. நிஸாா் தீா்ப்பளித்தாா். அதன்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவா்களில் 8 பேருக்கு ஆயள் தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு குற்றவாளிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. குற்றவாளிகளின் அபராதத் தொகையை கொலை செய்யப்பட்ட சூரஜின் குடும்பத்தினா் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.
ஆயுள் தண்டனை பெற்றவா்களில் ஒருவரான பி.எம். மனோராஜ் கேரள முதல்வரின் ஊடகத் துறை செயலா் மனோஜின் சகோதரா் ஆவாா். குற்றவாளிகளில் மேலும் ஒருவா் ஏற்கெனவே மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா்.
10-ஆவது குற்றவாளியான பிரகாசம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். முதல் குற்றவாளி ஷம்சுதீன் அலி, 12-ஆவது குற்றவாளி ரவீந்திரன் ஆகியோா் விசாரணை நடைபெற்று வந்தபோதே இறந்துவிட்டனா்.