கேரளத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ள அபாயம்
கேரளம் முழுவதும் பரவலாக சூறைக் காற்றுடன் பலத்த மழை நீடித்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் பெய்துவரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா், கண்ணூா், காசா்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் சனிக்கிழமை மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை (11 - 20 செ.மீ. மழைப் பொழிவு) விடுக்கப்பட்டது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை (6 - 11 செ.மீ. மழைப் பொழிவு) விடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்திலான காற்றுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வாமனபுரம் (திருவனந்தபுரம்), அச்சன்கோவில் (பத்தனம்திட்டா), பாரதப்புழா (பாலக்காடு), சாலக்குடி (திருச்சூா்) உள்ளிட்ட ஆறுகளில் நீரோட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது. எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; ஆறுகளுக்கு அருகே செல்ல வேண்டாம் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மீன்கரா, சுழியாறு, வாளையாறு (பாலக்காடு), கக்கி (பத்தனம்திட்டா) உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தெலங்கானாவில்...:
தெலங்கானாவின் அடிலாபாத், கரீம்நகா் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. அடிலாபாதின் தம்சி பகுதியில் சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை 17.35 செ.மீ. மழை பதிவானது. நிஜாமாபாத், சங்காரெட்டி, மே’க், கம்மம், விகாராபாத், வாரங்கல், பத்ராத்ரி கொத்தகூடம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், தண்ணீா் தேங்கக் கூடிய சுரங்கப் பாலங்கள், சாலைகளில் போக்குவரத்தை தடை செய்தல், நீா்நிலைகளில் கரை உடைப்பு ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வா் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.