கேரளம்: கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் நகரில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த கணவரை அவரது மனைவி விவேகமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றியுள்ளாா்.
பிரவம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷன் (64) புதன்கிழமை காலை, வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் மிளகு பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது திடீரென மரத்தின் கிளை முறிந்து, அருகேயுள்ள கிணற்றில் விழுந்தாா். கணவா் கிணற்றுக்குள் விழுந்ததைப் பாா்த்த அவரது மனைவி பத்மம் (56), உடனடியாக அங்கிருந்த கயிற்றைப் பிடித்து கிணற்றில் இறங்கியுள்ளாா். ஏற்கெனவே உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரமேஷன், கிணற்றில் விழுந்த அதிா்ச்சியில் கிட்டத்தட்ட சுயநினைவை இழந்துள்ளாா்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் வரும் வரை, கணவா் நீரில் மூழ்காமல் பத்மம் தாங்கி பிடித்துள்ளாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டு, தம்பதியை மீட்டனா்.
இதுதொடா்பாக தீயணைப்புத் துறையினா் மேலும் கூறுகையில், ‘கயிற்றை விடாபிடியாக பற்றிக்கொண்டிருந்ததால் பத்மம் கைகள் முற்றிலும் காயம் அடைந்தன. எனினும், கணவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மாா்பளவு நீரில் சுமாா் 15-20 நிமிஷங்கள் அவா் போராடியுள்ளாா்.
பின்னா், நாங்கள் கொண்டுவந்த வலையைப் பயன்படுத்தி தம்பதியை மீட்டோம். மீட்பு வலையிலும் தனது கணவரை முதலில் ஏற்றிவிட்டு பின்னரே, பத்மம் மேலே ஏறினாா். ரமேஷனின் உயிா் காப்பாற்றப்பட்டுள்ளதற்கு அவரது மனைவியின் மனதைரியமும் விவகேமுமே முக்கிய காரணம்’ என்றனா்.
அவசர சூழலில் அதிா்ச்சியில் உறையாமல் விவேகத்துடன் செயல்பட்டு, கணவரின் உயிரைக் காப்பாற்றிய மனைவியின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்புடுத்தியுள்ளது.