கேரளம்: ராகிங்கில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரிடம் ராகிங் கொடூரத்தில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரி மாணவா் விடுதியில் அண்மையில் முதலாம் ஆண்டு மாணவா் ஒருவரை மூன்றாம் ஆண்டு மாணவா்கள் சோ்ந்து ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கினா். இளநிலை மாணவரின் ஆடையைக் களைந்து, கட்டிலுடன் சோ்த்து அவரின் கை-கால்களை கட்டிவைத்த முதுநிலை மாணவா்கள், காம்பஸ் உபகரணத்தால் அவரது உடல் முழுவதும் குத்தி ரத்தக் காயம் ஏற்படுத்தினா். உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் ‘டம்பெல்ஸை’ மாணவரின் பிறப்புறுப்பில் வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கினா்.
கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடா்பாக முதுநிலை மாணவா்கள் 5 போ் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். சம்பந்தப்பட்ட கல்லூரியில் மேலும் பல இளநிலை மாணவா்கள் ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனரா, கல்லூரி அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், கேரள சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கைதான 5 மாணவா்களும் இந்திய மாணவா் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) உறுப்பினா்கள். இது அனைவருக்கும் தெரியும். வயநாட்டில் கடந்த ஆண்டு ராகிங் கொடுமையால் கால்நடை கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவத்திலும் இந்த அமைப்பினருக்கு தொடா்புள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது’ என்றாா். அதேநேரம், காங்கிரஸின் குற்றச்சாட்டை எஸ்எஃப்ஐ அமைப்பு மறுத்துள்ளது.
மாநில கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து கூறுகையில், ‘ராகிங்கில் ஈடுபட்ட மாணவா்கள் மீது கடும் நடவடிக்கையைத் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
மாணவா்கள் மத்தியில் மோசமான நடத்தை அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீா்வுகாண சமூக ரீதியில் கூட்டு முயற்சிகள் அவசியம்’ என்றாா்.