ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்துக்கான முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை கேரள அரசு செலவிட்டுள்ளது.
இந்த விழிஞ்சம் துறைமுகம் காரணமாக கடல்சார் வர்த்தகத்தில் கேரளம் முக்கிய இடத்தைப் பெறும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், நாட்டின் ஆழ்கடல் சரக்குப் போக்குவரத்துை துறைமுகமாகவும் இது அமைந்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கப்பல்களை தற்போது வெளிநாட்டு துறைமுகங்களே கையாண்டு வரும் நிலையில், அந்த நிலைமையை விழிஞ்சம் துறைமுகம் மாற்றும் என்று கூறப்படுகிறது.
இந்த துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து சோதனை முயற்சி கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. முழுமையாக செயல்படத் தொடங்கியது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில். இந்த துறைமுகம் 5,50,000 கண்டெய்னர்களை கையாளவும் 270 மிகப்பெரிய கப்பல்களை கையாளவும் திறன்பெற்றதாக அமைந்தளள்து.
உலக நாடுகளுக்கு சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ள இந்தியா இதுவரை கொழும்பு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைத்தான் நம்பியிருந்தது. அதாவது, இந்தியாவிலிருந்து பொருள்களை சிறிய கப்பல்களில் இந்த நாட்டுத்துறைமுகங்களுக்குக் கொண்டு சென்று அங்கிருந்து சரக்குக் கப்பல்களில் ஏற்றி அனுப்பும் நிலை இருந்தது.
தற்போது ஆழ்கடல் சரக்குப்போக்குவரத்து துறைமுகம் நிர்மானிக்கப்பட்டுள்ளதால் இனி, 20 ஆயிரம் கண்டெய்னர்களைக் கொண்ட எந்த சரக்குக் கப்பலும் இந்தியாவுக்கு நேரடியாக வரலாம். சர்வதேச கடல் பாதையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைந்திருப்பதால், வணிகப் போக்குவரத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிக்கவிருக்கிறது.
மகாராஷ்ர மாநிலத்திலும் இதுபோன்ற ஆழ்கடல் போக்குவரத்துத் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, விழிஞ்சம் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு ஐஎஸ்பிஎஸ் தரச்சான்று வழங்கி ஐஎம்ஓ கௌரவித்தது. இது வரலாற்றுச் சாதனை என்று மத்திய துறைமுகம், கப்பல்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. இச்சான்றின் மூலம் விழிஞ்சம் துறைமுகத்தில் சா்வதேச அளவிலான கடல்சாா் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு முறையின்கீழ் (பிபிபி) விழிஞ்சம் துறைமுகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் தனியாா் ஒப்பந்ததாரராக அதானி குழுமம் உள்ளது.