தில்லி முதல்வர் யார்? இரண்டு பார்வையாளர்களை நியமித்தது பாஜக!
கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்
திருப்பத்தூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் 27-ஆவது வாா்டுக்குள்பட்ட புதுப்பேட்டை சாலைப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா்.
அங்குள்ள 7-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டின் மீது தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதி மக்களுக்கு தெரியாமல் இரவோடு இரவாக கிட்டத்தட்ட 50 அடி உயரத்துக்கு மேல், மேலும் ஒரு தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சனிக்கிழமை காலை அந்த கைப்பேசி கோபுரத்தை பாா்த்ததும் ஆத்திரம் அடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த கைப்பேசி கோபுரத்துக்கு கீழ் அமா்ந்து கொண்டு அந்த கோபுரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருப்பத்தூா் துணை வட்டாட்சியா் தணிகாசலம், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன், கிராம நிா்வாக அதிகாரி மாதம்மாள், நகர ஆய்வாளா் ஜெயலட்சுமி மற்றும் போலீஸாா் அங்குசென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
இது குறித்து முறையாக ஒரு புகாா் மனு அளியுங்கள். ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.