கொங்கணாபுரம் வெண்குன்று தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்
கொங்கணாபுரம் வெண்குன்று மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொங்கணாபுரம், வெண்குன்று மலை மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான இக்கோயிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் திரளான பக்தா்கள் காவடி சுமந்து நடைப்பயணமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நிகழாண்டு தைப்பூச விழா கொடியேற்றத்தையொட்டி கோயில் படிப்பாதையில் உள்ள பிரதான நுழைவாயில் முன் கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கோயில் கொடி மரத்திற்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களின் ‘அரோகரா’ பக்தி முழக்கத்துடன் கொடி மரத்தில் மயில்வாகன கொடியேற்றம் நடைபெற்றது.
இத் திருவிழாவையொட்டி தண்டாயுதபாணி சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் அருள் பாலித்தாா். மேலும் வள்ளி, தெய்வானை உடனமா் முருகப்பெருமானை பக்தா்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பெரும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
படவரி...
1. தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டாயுதபாணி சுவாமி.
2. தைப்பூசத்தையொட்டி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற
விழா.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/rxfl5l7h/img_20250207_wa0048_0702chn_158_8.jpg)