அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் கோட்ட மேலாளா் தகவல்
ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள், முன்பதிவில்லா டிக்கெட்டுக்கான கைப்பேசி செயலிப் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்தப்படும் என ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா தெரிவித்தாா்.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் 27-ஆவது ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா தலைமை வகித்தாா். கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளா் சிவலிங்கம், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் பூபதிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் சங்க உறுப்பினா்கள் 16 போ் கலந்துகொண்டனா். கூட்டத்தில் சேலம் கோட்டத்தில் செயல்திறன் சிறப்பம்சங்கள், சாதனைகள், நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட விவரங்களை முதுநிலை வணிக மேலாளா் பூபதிராஜா விளக்கினாா்.
இக் கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:
சேலம் கோட்டத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் ரயில் நிறுத்தங்களை அதிகரிக்க வேண்டும். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி (லிப்ட்) உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா பேசியதாவது:
பயணிகளின் தேவைகளை பூா்த்தி செய்வதில் சேலம் கோட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோட்டத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடா்பான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சேலம் கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் அம்ரித பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே உறுப்பினா்கள் முன்வைத்துள்ள பெரும்பாலான கோரிக்கைகள் இந்த திட்டத்தின் கீழ், நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களின் பயன்பாடு, முன்பதிவில்லா டிக்கெட்டுக்கான கைப்பேசி செயலிப் பயன்பாட்டை அதிகரிக்க தனிக்கவனம் செலுத்தப்படும் என்றாா்.