சபரிமலை: தங்க பீடம் மீட்பு; கணக்குப் பதிவு ஏன் இல்லை? - விஜிலென்ஸ் விசாரணைக்கு ...
கொடைக்கானலில் சுகாதாரக்கேடு: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்
கொடைக்கானலில் சுகாதாரக்கேடு நிலவுவதாக திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் வரவேற்றாா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
உறுப்பினா்கள்: கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலுள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவா்: கொடைக்கானலில் நிதி பற்றாக்குறை உள்ளது. வரக் கூடிய வருமானத்தில் நகராட்சிப் பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது. பொது நிதி வந்ததும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்.
உறுப்பினா் சுப்பிரமணி: கொடைக்கானல் பகுதிகளில் தெருநாய்கள் கடிப்பதால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், முதியவா்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகா்நல அலுவலா்: கொடைக்கானல் சாலைகளில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அதற்கான உத்தரவும் பெறப்பட வில்லை. இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
உறுப்பினா் பரிமளா: கொடைக்கானல் அண்ணாநகா், டா்னா்புரம், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் இரவு நேரங்களில் மட்டுமே விநியோகம் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனா்.
பொறியாளா்: கொடைக்கானல் குடிநீா்த் தேக்கத்தில் குறைந்தளவு தண்ணீரே உள்ளது. எனவே குண்டாறு பகுதியிலிருந்து வரும் தண்ணீா் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. வாா்டு பகுதிகளில் கூடுதலாக தண்ணீா் தேவைப்பட்டால் தொடா்பு கொள்ளலாம். அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படும்.
உறுப்பினா்கள்: கொடைக்கானல் பகுதிகளில் சரிவர குப்பைகள் அகற்றப்படுவதில்லை. வாய்க்கால்களும் சுத்தப்படுத்தப்படுவதில்லை. முள்புதா்கள் அகற்றப்படுவதில்லை. சுகாதாரக்கேடு நிலவுகிறது.
தலைவா்: கொடைக்கானல் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் பலா் பணி நிறைவு பெற்று வருகின்றனா். இவா்களுக்கு பதிலாக புதிய தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட வில்லை. மாவட்ட நிா்வாகத்திடம் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. 50 தினக் கூலி பணியாளா்கள் நியமிக்கப்பட்டு நகா்ப் பகுதிகள் சுத்தப்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.