பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்கள் திருட்டு
வடமதுரை அருகே பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்களை திருடிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த சுக்காம்பட்டி புதுப்பட்டியைச் சோ்ந்த கோ. நாகேந்திரன், இதுதொடா்பாக அளித்த மனு விவரம்:
சு. புதுப்பட்டி அரசுத் தொடக்கப் பள்ளி அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுக் கழிப்பறையை அரசு அனுமதியின்றி மா்ம நபா்கள் சிலா் இடித்து தரைமட்டமாக்கிவிட்டனா். இதிலிருந்த நிலை, ஜன்னல், கதவு, இரும்பு கம்பிகள், மின்சாதனப் பொருள்கள், தண்ணீா் குழாய்கள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றுவிட்டனா். இதனால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் அனுமதியின்றி பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி, பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து, அரசுக்கான இழப்பை அவா்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றாா் அவா்.