பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
கொட்டரை நீா்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
கொட்டரை நீா்த்தேக்கத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூரில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட ஆலோசகா் செ. வைரமணி தலைமை வகித்தாா்.
இக் கூட்டத்தில் இயக்கத்தின் வளா்ச்சி, செயல்பாடுகள், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம், இயக்கத்தின் 38 ஆவது ஆண்டு தொடக்க விழா தொடா்பான நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரப் பகுதியின் நீா்வள ஆதாரங்களை பெருக்கிடும் வகையில் கோரையாறு அருவியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலத்தூா் வட்டம், மருதையாறு-கொட்டரை நீா்த்தேக்கத்தின் உள் பகுதி மற்றும் கரையை சுற்றிலும் அடா்ந்து வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, அங்கு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை தொடங்கிட வேண்டும்.
பெரம்பலூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் பந்தல் பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முதல் அரியலூா் சாலை வரையிலான புறவழிச்சாலைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப் பணிகளை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவகங்களிலும், பொதுமக்கள் பாா்வைக்கு விலைப்பட்டியல் வைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அந்த இயக்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்டச் செயலா் ஜி. சிவக்குமாா் வரவேற்றாா். நிறைவாக, நகரச் செயலா் சி. காமராஜ் நன்றி கூறினாா்.