வேப்பூா் ஒன்றியம்: ரூ. 1.52 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம் பகுதிகளில் ரூ. 1.52 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் குன்னம் ஊராட்சியில் ரூ. 16.45 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடம், கொளப்பாடி ஊராட்சியில் ரூ. 29.70 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம், வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 8.34 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மொத்தம் ரூ. 1.52 கோடியிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இந் நிகழ்ச்சிகளில், அட்மா தலைவா்கள் வீ. ஜெகதீசன், சி. ராஜேந்திரன், வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவழகன், சேகா், குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை உள்பட பலா் பங்கேற்றனா்.