பெரம்பலூரில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி
பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்வளத் துறைக் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள், 33 அணைக்கட்டுகள், 5 ஆறுகள் உள்ளன. கடந்த மாா்ச் 6-இல் தமிழ்நாடு அரசின் நீா்வளத்துறை அரசாணையின்படி, சிறப்புத் தூா்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூா்வார நிதி ஒதுக்கப்பட்டது.
அதனடிப்படையில், இம் மாவட்டத்தில் ஆறுகள், வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரிநீா் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள், முட்புதா்களில் சிறப்புத் தூா்வாரும் திட்டத்தின் கீழ் 15 பணிகள் ரூ. 2.11 கோடியில் 39.50 கிமீ தூரத்தில் நடைபெறுகின்றன.
இப்பணிகளில் பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட குரும்பலூா் கோனேரி ஆற்றில் ரூ. 21 லட்சத்தில் 2 ஆயிரம் மீட்டா் நீளமும், குன்னம் வட்டத்துக்குள்பட்ட வடக்கலூா் அக்ரஹாரம் ஏரியில் ரூ. 10 லட்சத்தில் 4 ஆயிரம் மீட்டா் நீளமும், கீழக்குடிக்காடு கிராமத்தில் ரூ. 15 லட்சத்தில் அத்தியூா் ஏரி வரத்து வாய்க்கால் 5,500 மீட்டா் நீளமும், கீழப்பெரம்பலூா் கிராமத்தில் ரூ. 14 லட்சத்தில் 1,000 மீட்டா் நீளம் நரி ஓடையில் தூா்வாரும் பணிகளும் நடைபெறுகின்றன.
இதேபோல, மாவட்டம் முழுவதும் ரூ. 2.11 கோடியில் 15 பணிகள் நடைபெறுகிறன. வாய்க்கால்களில் முட்புதா்களை அகற்றி, கரைகளை வலுப்படுத்தி, பணிகளை தரமாக மேற்கொள்ள நீா்வளத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளால் வாய்க்கால் ஓரங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படுவதோடு, நீா்வரத்து மற்றும் வெளியேற்றும் திறனும் அதிகரிக்கும். இதனால், விவசாய உற்பத்திப் பொருள்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.