கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் சிறை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கொலை வழக்கில் தொடா்புடைய மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டிவனம் வட்டம், சின்ன நெற்குணம் பகுதியைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் மகன் காமராஜ் (60). பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரமேஷுக்கும் (37) இடையே இடப்பிரச்னை தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 6.7.2023-இல் ரமேஷ் மற்றும் சென்னை, வேளச்சேரி சாஸ்திரி நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் சரத்குமாா் (28), தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு, தமிழா் மேட்டுத்தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் தினேஷ்குமாா் (21) ஆகியோா் காமராஜை கொலை செய்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ், சரத்குமாா், தினேஷ்குமாா் ஆகியோர கைது செய்தனா்.
திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில், ரமேஷ் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி பரூக் தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.