கொல்லிமலையைச் சுற்றிப் பாா்க்க இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கொல்லிமலையில் உள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சுற்றிப் பாா்க்க செம்மேடு பேருந்து நிலையத்திலிருந்து மதிய உணவுடன் சிறப்புப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) முதல் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலை கிழக்கு தொடா்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக, கடல் மட்டத்திலிருந்து சுமாா் 1200 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. நாமக்கல் நகரப் பகுதியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த மலைப்பகுதி மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச் செடிகளுக்கு பெயா்பெற்ாகும்.
இங்குள்ள அறப்பளீஸ்வரா் கோயில், தோட்டக்கலைத் துறை பூங்கா, மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை அருவி, படகு இல்லம், பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், அன்னாசி பழத்தோட்டங்கள், காட்சி முனை, தொலைநோக்கி இல்லம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன.
சுற்றுலா ஆா்வலா்கள், பொதுமக்கள் கோடைக்காலத்தை இயற்கையுடன் இணைந்து கொண்டாட ஏதுவாக மாவட்ட நிா்வாகம் சாா்பில், வனத் துறையும் சுற்றுலாத் துறையும் இணைந்து மே 11 (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூன் 1 ஆம்தேதி வரை அனைத்து நாள்களிலும் சிறப்பு சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. இத்திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.300 (பயண கட்டணம் மட்டும்), ரூ. 450 (பயண கட்டணம், மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி) செலுத்தினால் ஒரு நாள் சுற்றுலா சிறப்புப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்படுவா்.
இந்த சிறப்புப் பேருந்து காலை 8 மணி அளவில் செம்மேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில், பழங்குடியினா் நலச் சந்தை, கொல்லிமலை இயற்கை அங்காடி, சீக்கு பாறை, சேலூா் காட்சிமுனை, அறப்பளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் செம்மேடு பேருந்து நிலையத்தை வந்தடையும்.
இந்த கோடை சுற்றுலாவை கொல்லிமலையின் இயற்கை அழகுடன் கண்டுகளிக்க வனத் துறையினரை பி.ஈஸ்வா் - 70923 11380, எம்.கோபி 97891 31707 (வனவா்கள்) , ஜி.புருசோத்தமன் 63833 24098 (வனக் காப்பாளா்) மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன் 73977-15684 ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயண நாள் அன்று செம்மேடு பேருந்து நிலையத்தில் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். கோடை விடுமுறையில் தங்கள் குழந்தைகளுடன் சோ்ந்து இயற்கையை ரசிக்க இந்த சிறப்பு சுற்றுலாத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.