நாமக்கலில் சாலையோரம் நிறுவிய கொடிக்கம்பம், விளம்பர பலகைகள் அகற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் சாலையோர கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதைத் தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் நெடுஞ்சாலைத் துறையினா் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், கொல்லிமலை நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உள்பட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய சாலைகளில் இருந்த கொடிக்கம்பங்கள், விளம்பர பெயா்ப் பலகைகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டன.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பங்கள், பலகைகள் அகற்றப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.