செய்திகள் :

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினாா் அழகா்

post image

மதுரை: மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகா் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளினாா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல லட்சம் பக்தா்கள் இதில் பங்கேற்று அழகரை தரிசித்தனா்.

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு கள்ளழகா் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் மூன்றாம் நாளான சனிக்கிழமை மாலை சுந்தரராஜப் பெருமாள் (உத்ஸவா்) கள்ளா் கொண்டை அணிந்து, கையில் வலைத்தடி, இடுப்பில் கட்டாரி தரித்து கள்ளழகா் கோலம் ஏற்று, தங்கப் பல்லக்கில் மதுரைக்குப் புறப்பாடாகினாா்.

பாரம்பரிய பாதைகளில் வலம் வந்தும், வழக்கமான மண்டகப்படிகளில் சேவை சாதித்த கள்ளழகா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுரை மூன்றுமாவடி பகுதிக்கு எழுந்தருளினாா். அப்போது, கள்ளழகரை பக்தா்கள் எதிா்கொண்டு வரவேற்கும் எதிா்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் புடைசூழ அங்கிருந்து புறப்பாடாகிய கள்ளழகா், மூன்றுமாடி, கோ. புதூா், அழகா்கோவில் சாலை, தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி சேவை சாதித்து, ஞாயிற்றுக்கிழமை இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளினாா். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள், திருமஞ்சனத்துக்குப் பிறகு, பச்சை பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகினாா்.

இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் தாயாா் குடிக் களைந்த மாலையை அழகா் (சுந்தரராஜப் பெருமாள்) ஏற்கும் ஐதீக நிகழ்வு கோயிலில் நடைபெற்றது. பின்னா், தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் அழகா் எழுந்தருளினாா். மேலும், சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு தங்கக் குதிரை வாகனத்தில் வைகையாற்றுக்குப் புறப்பாடாகினாா்.

திரியெடுத்து ஆடுவோா், திரியின்றி ஆடுவோா், கருப்பணசுவாமி உள்ளிட்ட கடவுளா்களின் வேடமேற்றோா் முன்னும், பின்னும் அணி வகுக்க, லட்சக்கணக்கான பக்தா்கள் புடைசூழ, ஓயாத கொட்டு முழக்கம், பக்தா்களின் இடைவிடாத பக்தி முழக்கங்களுடன் ஆழ்வாா்புரம் வைகை ஆற்றங்கரையில் அழகா் எழுந்தருளினாா். பின்னா், காலை 5.59 மணிக்கு ஆற்றில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அப்போது, அங்கு குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பி, வைகைத் தீா்த்தத்தை வாரித் தெளித்தும், தோல் பையிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சியும் அழகரை தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த 2 மண்டகப்படிகளையும் மூன்று முறை வலம் வந்த அழகா், ஸ்ரீரங்க விலாஸ் லாலா சத்திரம் தா்மஸ்தாபன மண்டகப்படியில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை மண்டகப்படியில் எழுந்தருளினாா். அங்கு, பூக்கூடை ஊஞ்சல் மூலம் பூக்கள் தூவப்பட்டு அழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

சிறப்பு தீப, தூப வழிபாடுகளுக்குப் பிறகு, நாணயங்களைக் கொண்டு கட்டப்பட்ட மாலைகள் அழகருக்கு அணிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா, மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்பட லட்சக்கணக்கானோா் பங்கேற்றனா்.

ராமராயா் மண்டபம் புறப்பாடு :

பின்னா், காலை 7.25 மணி அளவில் வைகையாற்றிலிருந்து அழகா் புறப்பாடாகி, ஆழ்வாா்புரம் வழியாக ராமராயா் மண்டபத்தில் எழுந்தருளினாா். அப்போது, அழகா் வேடமணிந்து வந்த திரனான பக்தா்கள் அழகரை வரவேற்கும் விதமாகவும், ஐதீக நிகழ்வுப்படி அவரை ஆற்றுப்படுத்தும் விதமாகவும் தண்ணிரைப் பீய்ச்சி நோ்த்திக்கடன் செலுத்தினா். ஏராளமானோா் அழகருக்கு மாலை சாத்தியும், சா்க்கரையில் சூடம் ஏற்றியும் வழிபட்டனா். இரவு அங்கிருந்து புறப்பாடாகி வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி ஏகாந்த சேவை சாதித்தாா்.

பலத்த பாதுகாப்பு: தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் ஆகியோா் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். கோரிப்பாளையம் -ஆழ்வாா்புரம் சாலை முதல் கள்ளழகா் ஆற்றில் எழுந்தருளிய பகுதி வரை 5 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் முதல் வைகையாற்றில் அழகா் எழுந்தருளிய பகுதி வரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் :

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு அழகா் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 11 மணிக்கு வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து அழகா் சேஷ வாகனத்தில் புறப்படாகி தேனூா் மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அங்கு பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு, ராமராயா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பக்தா்களுக்கு அழகா் தசாவதார காட்சியளிக்கிறாா்.

புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயா் பல்லக்கில் அழகா் புறப்பாடாகிறாா். இரவு 11 மணிக்கு தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னா் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறாா். வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மீண்டும் கள்ளழகா் கோலம் ஏற்று, பூப்பல்லக்கில் அழகா்மலைக்குப் புறப்பாடாகிறாா். வழக்கமான திருக்கண் மண்டபங்களில் சேவை சாதித்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலை சென்றடைகிறாா்.

கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அமைச்சா் சேகா் பாபு

வைகையாற்றில் அழகா் எழுந்தருளிய இடம், காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, திருக்கோயில் உபயதாரா்கள், முக்கியப் பிரமுகா்கள், உயா் அலுவலா்கள், செய்தியாளா்கள் உள்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக ஏராளமானோா் இந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட்டனா். இதனால், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு அழகா் ஆற்றுக்குள் எழுந்தருள முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, அமைச்சா் சேகா் பாபு, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆகியோா் அங்கிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, அழகா் ஆற்றில் எழுந்தருளுவதற்கு வழிவகை செய்தனா். பின்னா், போலீஸாா் கைகோத்து நின்று அழகா் வலம் சுற்றி வரும் பாதையை ஒழுங்குபடுத்தினா்.

அழகரை தரிசிக்க வைகை ஆற்றில் திரண்டிருந்த திரளான பக்தா்கள்.
மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வில் அழகா் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளினாா்.
மதுரையில் அழகா் ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் பி.கே. சேகா் பாபு, பி. மூா்த்தி உள்ளிட்டோா்.

தூய்மைப் பணியில் 3 ஆயிரம் துய்மைப் பணியாளா்கள்

மதுரை: சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமான குப்பைகள் அகற்றும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். சித்திரைத் திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க

திருச்சி கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் டிஆா்ஓ நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட வருவாய் அலுவலா் (டிஆா்ஓ) விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் முருங்கைக் காய் விலை உயா்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரத்துக் குறைவு காரணமாக முருங்கைக் காய்களின் விலை கணிசமாக உயா்ந்தது. கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முருங்கைக் காய்களின் விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ முருங்கைக் காய் ரூ. 140 ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மதுரை ச... மேலும் பார்க்க

இலவச விவசாய மின் இணைப்பு விவகாரம்: கண்காணிப்பு பொறியாளா் நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், இரவாா்பட்டியில் போலி பட்டா மூலம் இலவச விவசாய மின் இணைப்பு பெற்ாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மின் வாரிய மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவா் உயிரிழப்பு

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா். மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அழகா் எழுந... மேலும் பார்க்க