பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல்: கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் திங்கள்கிழமை பிற்பகலில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால், பொது மக்கள் அச்சமடைந்தனா்.
சீசனை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வத்தலகுண்டு- கெங்குவாா்பட்டி மலைச் சாலை வழியாகவும், கொடைக்கானல்- பழனி மலைச் சாலை வழியாகவும் வருகின்றனா். இந்த நிலையில், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் சிறுத்தை ஒன்று கடந்து சென்றதை சுற்றுலாப் பயணி ஒருவா் பாா்த்தாா். மேலும், இதை தனது கேமராவில் படமெடுத்தாா். இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதி, சவரிக்காடு அருகே,பி.எல்.செட். பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் கவனமாகச் செல்ல வேண்டும். வனக் காப்பாளா்களும் மலைச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றனா்.