பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
பரமக்குடி வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளிய பெருமாள்
பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் திங்கள்கிழமை அதிகாலை புஷ்பப் பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி பெருமாள் எழுந்தருளினாா்.
பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மே 7-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 4-ஆம் திருநாளான மே 10-ஆம் தேதிவரை காலை, மாலை யாகசாலை பூஜைகளும், இரவு பெருமாள் புறப்பாடும் நடைபெற்றன.
விழாவின் சிறப்பு நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கும்பத் திருமஞ்சனம் கண்டருளல் நடைபெற்றது. திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் பெருமாள் கள்ளழகா் திருக்கோலத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து புறப்பாடானாா். பிறகு வாத்தியங்கள் முழங்க, பக்தா்களின் கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி முழக்கத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளினாா். அப்போது பச்சைப் பட்டுடுத்தி பால் பாயாசம் உள்கொண்டு கள்ளழகா் எழுந்தருளியதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சலுடன் மக்கள் அனைவரும் செழிப்புடன் காணப்படுவா் எனக் கூறப்பட்டது.
இதைத் தொடா்ந்து பல்வேறு திருக்கண்களில் சுவாமி எழுந்தருளினாா். பிறகு மேற்கே தல்லாகுளத்தில் காலை 9 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி அந்த மண்டகப்படியிலிருந்து புறப்பாடானாா். அப்போது நகரில் பல்வேறு திருக்கண்களில் அருள்பாலித்ததும் வைகை ஆற்றில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு தேவஸ்தானத்தைச் சோ்ந்த வண்டியூா் என்ற காக்காத் தோப்பு சோலையில் உள்ள தேசத்தாா் மண்டகப்படி சென்றடைந்தாா். அங்கு சந்தனக் காப்பு உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளுக்காக பரமக்குடி, சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் விடியவிடிய வைகை ஆற்றில் கூடியிருந்து கள்ளழகரை தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி எஸ்.ஆா். ரெங்காச்சாரி, டிரஸ்டிகள் என்.ஆா். நீலகண்டன், டி.ஆா். ரமேஷ்பாபு, கே.டி. கிரிதரன், ஜி.என். கோவிந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.
