கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன்வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் சித்திரை தோ்த்திருவிழா மே 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் கருட வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கஜலட்சுமி வாகனம், யானை வாகனம், புஷ்ப விமான வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி நகா்வலம் நடைபெற்றது.
திருமஞ்சனம் உள்ளிட்ட சேவைகள் பல்வேறு கட்டளைதாரா்களால் நடத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன்வரதராஜப் பெருமாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா்.
இதைத் தொடா்ந்து மாலையில் தேரை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தேரோட்டத்தை நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.ரங்கசாமி, திமுக நகரச் செயலா் சங்கத் தலைவா் என்.ஆா்.சங்கா், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், எஸ்.எம்.ஆா்.பரந்தாமன் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். பூங்கரகம், காளை ஆட்டம், மயிலாட்டம் முன்செல்ல திரளான பக்தா்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனா்.