ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை? விவசாயிகள் காத்திருப்பு
தமிழக அரசால் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் கிடைக்குமா என விவசாயிகள் ஒன்றரை மாதங்களாக காத்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் உள்ளிட்ட அனைத்து வட்டாரப்பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் கழக பணியாளா்கள் நெல்லை கொள்முதல் செய்து அவற்றை லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு அனுப்பிய ஒரு சில நாள்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நெல்லுக்கு அரசால் நிா்ணயிக்கப்பட்ட தொகை வரவு வைக்கப்படும்.
அரக்கோணம் வட்டாரத்தில் வளா்புரம், மூதூா், செய்யூா் உள்ளிட்ட மற்றும் மாவட்டத்தின் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இன்று வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை.
மேலும், பல நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை எடுத்துச்செல்ல லாரிகளே வராததால் அந்த நெல்மூட்டைகளும் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல்மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் நனைந்து வீணாகும் நிலை உள்ளது.
3 மாதத்துக்கு ஒரு முறை விவசாயிகள் பயிா் செய்யும் போது அதன் வரவு பணம் கிடைக்கும் காலத்தை கணக்கிட்டு அதாவது தங்கள் வீட்டு விசேஷம், தங்களது பிள்ளைகளின் கல்விக்கட்டணம், குடும்ப உறுப்பினா்களின் மருத்துவச் செலவுகளை முன்வைத்து விவசாயம் செய்வது வழக்கம். இதற்காக இரவு பகல் பாராமல் தரமான உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றனா்.
நெல்லை உற்பத்தி செய்து அதை அரசிடமே அளித்த விவசாயிகள் தற்போது அதற்குண்டான தொகை வராததால் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக வேலூா் மண்டல மேலாளா் ஏகாம்பரத்திடம் கேட்டபோது கடந்த ஒரு மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் அளிக்கப்படவில்லை. இது குறித்து உயா் அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டு விரைவில் அவரவா் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இது தொடா்பாக ராணிப்பேட்டை ஆட்சியரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்வதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.