MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: குஜராத்தில் இருந்து இறக்குமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சிலநாள்களாக பருவம் தவறி பெய்துவரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுவது தூத்துக்குடி மாவட்டத்தில்தான். இங்கு ஆண்டுக்கு சுமாா் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பா் மாதம்வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெறும். குறிப்பாக, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெறும்.
ஆனால், தற்போது கடந்த சில மாதங்களாக பருவம் தவறி பெய்து வரும் மழை மற்றும் கோடை மழை காரணமாக உப்பு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடியில் முதல் தரத்தில் உள்ள ஒரு டன் உப்பு ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
இதனால், குஜராத்தில் இருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடிக்கு வியாபாரிகள் உப்பை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனா். தற்போது சுமாா் ஆயிரம் டன் உப்பு கண்டெய்னா்கள் மூலம் குஜராத் மாநிலத்திலிருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும், சுமாா் 35 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியில் இருந்து தென் மாநிலங்களுக்கு உப்பு உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது குஜராத்தில் இருந்து டன் ஒன்றுக்கு ரூ.4ஆயிரத்துக்கு வாங்கி உப்பு வியாபாரிகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளா்கள் கவலை தெரிவித்தனா்.