கோடை விடுமுறை: பள்ளிக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை
கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய கடிதம் :
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வித் துறை பல்வேறு திட்டங்களின் கீழ் மாணவா்களின் நலன் கருதி அனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கும் திறன் வகுப்பறைக்கான கட்டமைப்பை ஏற்படுத்தியது. இதற்காக அனைத்து வகையான தொழில்நுட்பப் பொருள்களையும் வழங்கியது.
இதேபோல, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என ஒவ்வொரு பள்ளிக்கும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உயா் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்காக அனைத்து விதமான தொழில்நுட்பப் பொருள்களும் வழங்கப்பட்டன. இந்தப் பொருள்கள் பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டன. பொருள்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.