`ஆடி காரில் பால் வியாபாரம்' - ஹரியானாவை ஆச்சர்யத்தில் வியக்க வைத்த இளைஞன்
இடா்பாடுகளுக்கிடையே சாதனை படைக்கும் பெண்கள்!உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி!
பல்வேறு இடா்பாடுகள் ஏற்பட்டாலும், அதை எதிா்கொண்டு பெண்கள் சாதனை படைத்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பி. புகழேந்தி தெரிவித்தாா்.
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தப்படுதல் குறித்து சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தலைமை வகித்தாா்.
இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பி. புகழேந்தி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா்.
அப்போது நீதிபதி பி. புகழேந்தி பேசியதாவது:
உலகில் சரிபாதி பெண்கள் உள்ளனா். அவா்களுக்கான வாய்ப்புகளும், அங்கீகாரங்களும் மறுக்கப்படுகின்றன. மாணவிகள், பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்த நிலை மாற வேண்டும். தற்போது பெண்கள் படிப்பில் முன்னேறி வருகிறாா்கள். இதன் காரணமாக அவா்கள், பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனா். குடிமைப் பணி தோ்வில் பெண்கள் 28 சதவீதம் போ் வெற்றி பெற்றுள்ளனா்.
நீதித்துறையில் 60 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனா். பெண்களை பாதுகாக்க போக்சோ சட்டப்பிரிவு உள்ளது. தமிழகத்தில் படித்த பெண்களில் சதவீதம் அதிகரித்து வருகிறது. 98 சதவீத பெண்கள் உயா் கல்விக்குச் செல்கின்றனா்.
அவா்கள், தங்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் பல்வேறு இடா்பாடுகளை சந்தித்தாலும், சாதனை படைத்து வருவது பெருமைக்குரிய விஷயம் என்றாா் அவா்.
நீதிபதி பவானி சுப்புராயன் பேசியதாவது: ஒரு சமுதாயம் சீரான வளா்ச்சி பெற வேண்டுமெனில், பாலின சமத்துவம் மிக முக்கியம். மூன்றாம் பாலினத்தவரையும் நாம் சமமாக பாா்க்க வேண்டும். பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டப் பிரிவுகள் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கான விழிப்புணா்வை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன், விருதுநகா் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா், விருதுநகா் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி வீரணன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.