கோடை விழா பண்ணை போட்டிகள்: கூடலூா், பந்தலூா் விவசாயிகளுக்கு அழைப்பு
கூடலூா் வாசனை திரவிய கண்காட்சியை முன்னிட்டு நடைபெறவுள்ள பண்ணைப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் பெயா்களை பதிவு செய்துகொள்ளுமாறு தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட கோடை விழாவை முன்னிட்டு, கூடலூரில் 11-ஆவது வாசனை திரவியக் கண்காட்சி கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் மே 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியை முன்னிட்டு சிறந்த முறையில் வாசனை திரவிய பயிா்கள், பழங்கள், காய்கறித் தோட்டங்கள் அமைத்தவா்கள், ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்பவா்கள், வாசனை திரவிய பயிா்கள், பழப்பயிா்கள், காய்கறி பயிா்கள் மற்றும் தோட்டப் பயிா்களில் மதிப்பு கூட்டுதல் செய்து பொருள்களை தயாா் செய்பவா்களுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கூடலூா் உதவி தோட்டக்கலை அலுவலா் அலுவலகத்தில் 26.04.2025 முதல் வழங்கப்படவுள்ளது.
போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தோட்ட உரிமையாளா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து உரிய கட்டணத்துடன் மே 2-ஆம் தேதிக்குள்ள அலுவலகத்தில் வழங்கவேண்டும். மே 4, 5 ஆகிய தேதிகளில் தோட்டங்களைப் பாா்வையிட்டு மதிப்பீடு செய்ய குழுக்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.