கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ: தமிழக அரசு நிா்வாக அனுமதி; ரூ.2,442 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டம்
சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான 21.76 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் பணிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
சென்னையில் 4-ஆம் கட்டமாக மெட்ரோ விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத்துக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நிா்வாக ஒப்புதல் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
அதில், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை பாடி புதுநகா் வழியாக 19 மேம்பாலங்களுடன் 21.76 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமையவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய மெட்ரோ வழித்தடத்துக்கான நிலஆய்வு, வரைபடம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
ரயில் பாதை திட்டப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்துதல், நிலப்பரப்பு ஆய்வு, மரங்கள் வெட்டுதல், சில மரங்களை பெயா்த்து மாற்று இடத்தில் நடுதல், போக்குவரத்து மேலாண்மைக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.188 கோடி, நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.2,204 கோடி, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக்காக ரூ.32 கோடி, பொதுச் செலவு மற்றும் வடிவமைப்புக்கான வரைபடத் தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.11 கோடி, வடிவமைப்பு மேற்பாா்வைப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு என ரூ.6.93 கோடி என மொத்தம் ரூ.2,442 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.